உடைந்த எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை சீரமைக்காததால் வீணாகும் தண்ணீர்
அணைகள் நிரம்பியதால் தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்ட உபரிநீர், உடைந்த எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு வழியாக வீணாகிறது. இந்த அணைக்கட்டை சீரமைக்கக்கோரி அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் இந்த அணைக்கட்டின் வலதுபுறம் உள்ள 4 மதகுகளும் உடைந்தது. இதனால் அணைக்கட்டில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த அணைக்கட்டு ரூ.51 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இருப்பினும் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையினால் அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக ஒசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, திருவண்ணாமலை சாத்தனூர் அணை ஆகிய அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து உபரிநீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது திருவண்ணாமலை மாவட்டத்தை கடந்து தற்போது விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து வந்து தற்போது அங்குள்ள தென்பெண்ணையாற்றில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் அணைக்கட்டு சீரமைக்கப்படாததால் ஆற்றுக்கு வந்த தண்ணீர் சேமித்து வைக்கப்படாமல் அப்படியே வீணாக கடலில் சென்று கலந்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
அ.தி.மு.க.வினர் போராட்டம்
இந்நிலையில் இன்று காலை விழுப்புரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பசுபதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுக்கு திரண்டு சென்று உடைந்த அணைக்கட்டையும், தண்ணீர் சேமிக்கப்படாமல் வீணாக கடலுக்கு செல்வதையும் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள அணைக்கட்டு பகுதியில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நகர செயலாளர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், ராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் டாக்டர் முத்தையன், இணை செயலாளர் செங்குட்டுவன், நகரமன்ற கவுன்சிலர்கள் கோல்டுசேகர், கோதண்டராமன், ஆவின்செல்வம், கலை, பத்மாவதி, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் வக்கீல் பாக்யராஜ், மாவட்ட பிரதிநிதி கண்டமானடி ராஜி மற்றும் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும் பலர் கலந்துகொண்டு அணைக்கட்டு உடைந்து ஓராண்டாகியும் சீரமைக்க நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம், தமிழக அரசை கண்டித்தும், அணைக்கட்டை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.