சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள் தீயிட்டு கொளுத்தப்படும் அவலம்


சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள் தீயிட்டு கொளுத்தப்படும் அவலம்
x

தஞ்சை-நாகை மேம்பாலம் அருகே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை-நாகை மேம்பாலம் அருகே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தஞ்சை-நாகை சாலை

தஞ்சை-நாகை மேம்பால சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக விளங்கி வருகிறது. இந்த வழியாக நாகை, கும்பகோணம், திருவாரூர், சாலியமங்கலம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்லலாம். தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்கும் இது முக்கிய வழித்தடமாக இந்த சாலை விளங்குகிறது.இதன்காரணமாக இந்த சாலை வழியாக ஏராளமான பஸ்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் என சாலையில் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

குவிந்து கிடக்கும் குப்பை

இந்த நிலையில் தஞ்சை-நாகை மேம்பாலம் அருகே சாலையோரத்தில் ஆங்காங்கே குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ளன. இதனால் சாலையோரம் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குப்பைகளில் இரை தேடி கால்நடைகளும் அதிகளவில் அந்த பகுதிக்கு வருகின்றன. இவை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன.மேலும், பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகின்றன. அவற்றை சிலர் அவ்வப்போது தீயிட்டு கொளுத்தி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்து கொள்கிறது.

வாகன ஓட்டிகள் அவதி

இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் மிகுந்த சிரமத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். நடந்து செல்பவர்கள் மூக்கை மூடியபடி செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், இனிவரும் காலங்களில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


Next Story