வேலூர் ஆவினில் காவலாளி, தொழிலாளி பணி நீக்கம்
பால் திருட முயற்சி நடந்த சம்பவத்தில் வேலூர் ஆவினில் காவலாளி, தொழிலாளி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பால் திருட முயற்சி நடந்த சம்பவத்தில் வேலூர் ஆவினில் காவலாளி, தொழிலாளி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பால் பதுக்கல்
வேலூர் சத்துவாச்சாரியில் ஆவின் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து அதை பாக்கெட்டுகளாக மாற்றி வினியோகம் செய்து வருகின்றனர். தினமும் ஆவின் நிறுவனத்தில் இருந்து வேன் மூலம் பால் பாக்கெட்டுகள் பல்வேறு வழித்தடங்களில் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு திமிரி வழித்தடத்தில் செல்லக்கூடிய சரக்குவேனில் கூடுதலாக சுமார் 100 லிட்டர் பால் திருட்டுத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்தது. இதுதொடர்பாக பொது மேலாளர் சுந்தரவடிவேல் (பொறுப்பு) விசாரணை நடத்தி வருகிறார்.
பணிநீக்கம்
இந்த நிலையில் திமிரி வழித்தடத்தில் சென்ற அந்த சரக்கு வேன் நிறுத்தப்பட்டது. ஆவின் நிறுவனம் சார்பில் வேறு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு பால் வினியோகம் செய்யப்படுகிறது.
அன்றைய தினம் பணியில் இருந்த தற்காலிக பணியாளர்களான காவலாளி, பால் பாக்கெட்டுகளை அடுக்கி வைக்கும் தொழிலாளி ஆகியோரை பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் கண்காணிப்பு பணியை சரிவர மேற்கொள்ளாத செயலாளர் மனோகரனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக பொது மேலாளர் சுந்தரவடிவேல் தெரிவித்தார்.