பாப்பான்குளத்தில் குடிநீரில் கலப்படத்தால் பாதிப்பு


பாப்பான்குளத்தில் குடிநீரில் கலப்படத்தால் பாதிப்பு
x
திருப்பூர்


மடத்துக்குளத்தையடுத்த பாப்பான்குளம் பகுதியில் குடிநீரில் கலப்படம் செய்யப்படுவதால் நோய் பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாடு

பொதுவாக பலவிதமான நோய் பாதிப்புகளுக்கு சுகாதாரமற்ற குடிநீர் காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனைக்கருத்தில் கொண்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவியுடன் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதும் அதனைக் கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபடுவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாக உள்ளது. ஆனாலும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு தான் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணியாக உள்ளது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் பாப்பான்குளம் பகுதியில் 2 வகையான தண்ணீரை கலந்து விநியோகம் செய்வதால் பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடினத்தன்மை

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளின் வரப்பிரசாதமாக திருமூர்த்தி கூட்டு குடிநீர்த் திட்டம் உள்ளது. ஆனால் கடந்த சில வாரங்களாக பாப்பான்குளம் பகுதியில் திருமூர்த்தி குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. பாலில் கலப்படம், எண்ணெயில் கலப்படம், மளிகைப் பொருட்களில் கலப்படம் என பலவிதமான கலப்படங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கு திருமூர்த்தி குடிநீருடன் ஆழ்துளைக் கிணற்று நீரை கலப்படம் செய்து விநியோகிக்கின்றனர்.

சில நாட்களில் முழுமையாக ஆழ்துளைக் கிணற்று நீரே விநியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கடினத் தன்மை உடையதாக இருப்பதால் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. மேலும் 2 விதமான தண்ணீர் கலக்கும் போது பொதுமக்கள் அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தொடர்ச்சியாக கடினத்தன்மை உடைய நீரை குடிக்கும் போது சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட நீண்ட கால பாதிப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி குடிநீரில் கலப்படம் இல்லாமல் சுத்தமான திருமூர்த்தி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.


Next Story