மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறதா?-தர்மபுரி மாவட்ட பயனாளிகள் கருத்து


மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறதா?-தர்மபுரி மாவட்ட பயனாளிகள் கருத்து
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறதா? என்று தர்மபுரி மாவட்ட பயனாளிகள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டம்

மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது அரசின் முக்கிய கடமையாக உள்ளது. இவற்றில் மிக முக்கிய அடிப்படை தேவையாக இருப்பது குடிநீர். எனவே நீர் மேலாண்மைக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்து நீர் ஆதாரங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கிராமப்புறங்களை சேர்ந்த மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை நோக்கமாக கொண்டு பிரதமர் மோடி ஜல்ஜீவன் மிஷன் (ஊரக குடிநீர் இயக்கம்) என்ற திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்து அதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் கிராமப்புற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக புதிய குடிநீர் திட்டங்களை தொடங்கி குழாய்கள் பதித்தல், குடிநீர் தொட்டிகள் கட்டுதல், கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

15-வது நிதிக்குழு மானியத்திலிருந்து ஊராட்சிகளுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியில் 25 சதவீதத்தை ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

251 கிராம ஊராட்சிகளில்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 251 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில் 2,835 குக்கிராமங்கள் உள்ளன. இவற்றில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 241 குடியிருப்புகள் உள்ளன. சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.

மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் இதுவரை 53 ஆயிரத்து 277 குடிநீர் இணைப்புகள் ரூ.21 கோடியே 80 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன. 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய நிதி ஆண்டுகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் குடிநீர் இணைப்புகளை ரூ.40 கோடியே 98 லட்சம் மதிப்பில் வழங்க தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.

மீதமுள்ள ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 964 குடிநீர் இணைப்புகளை வருகிற நிதி ஆண்டுகளில் ஒகேனக்கல் 2-வது கட்ட கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தும்போது அனைவருக்கும் வழங்கிட விரிவான திட்ட மதிப்பீடுகள் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

நிலத்தடி நீர்மட்டம் குறைவு

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் ஒரு நாளில் 1 நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த தண்ணீரில் குடிநீர் மற்றும் பிற பயன்பாடுகளுக்கான தண்ணீரும் அடங்கும். தர்மபுரி மாவட்டத்தில் தற்போது உள்ள நீராதாரங்களை கொண்டு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 35 லிட்டர் தண்ணீரும், கிராமப்புறங்களில் உள்ள பிற நீராதாரங்கள் மூலம் 10 லிட்டர் தண்ணீரும் வழங்கப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பல்வேறு இடங்களில் குறைவாக இருப்பதால் இந்த திட்டத்திற்கு தேவையான முழுமையான நீர் ஆதாரத்தை நிலத்தடி நீர் மூலம் பெறுவதில் நடைமுறை பிரச்சினைகள் உள்ளன. எனவே 2-ம் கட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் மூலம் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்கு தேவையான கூடுதல் குடிநீரை பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தரமான குழாய்கள்

இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

இருமத்தூர் ஊராட்சி வையம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணவேணி:-

இந்த பகுதியில் எங்கள் வீடு உள்பட பல்வேறு வீடுகளுக்கு ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக டெபாசிட் தொகை எதுவும் பெறவில்லை. இந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் ஒகேனக்கல் குடிநீர் மற்றும் போர்வெல் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் மழை பெய்துள்ளதால் இப்போது குடிநீர் பிரச்சினை எதுவும் இல்லை. வறட்சி ஏற்படும் காலத்தில் தொடர்ந்து குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டத்தில் போடப்படும் குடிநீர் குழாய்கள் தரமானவையாகவும், நீண்ட காலம் பயன்படுத்தும் வகையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

அதியமான்கோட்டை ஊராட்சி நரசகவுண்டன் கொட்டாயை சேர்ந்த காளியம்மாள்:-

எங்கள் பகுதியில் முன்பு பொது இடங்களில் போடப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களுக்கு சென்று வரிசையில் காத்திருந்து குடங்களில் தண்ணீர் பிடித்து வருவோம். இப்போது வீட்டில் குடிநீர் இணைப்பு வழங்கி விட்டதால் விரைவாக தண்ணீர் கிடைத்து விடுகிறது. இந்த பகுதியில் காலையிலேயே குழாயில் தண்ணீர் வருகிறது. சில சமயங்களில் அதிக நேரமும், சில சமயங்களில் குறைந்த நேரமும் தண்ணீர் விடப்படுகிறது. இதை முறைப்படுத்த வேண்டும்.

பயனளிக்க கூடியது

கோட்டக்கரையை சேர்ந்த லிங்கேஸ்வரன்:-

ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலம் எங்கள் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் நேரம் மிச்சமாகி உள்ளது. முன்பு காலை நேரத்தில் பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு செல்பவர்களுக்கு முன்பு ஏற்பட்டு வந்த சிரமம் குறைந்துள்ளது. இப்போது போடப்பட்டுள்ள குடிநீர் குழாயில் ஒகேனக்கல் குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கப்படும் குடிநீர் மாறி மாறி வழங்கப்படுகிறது. ஒகேனக்கல் குடிநீர் முழுமையாக வழங்கினால் மகிழ்ச்சி அடைவோம். மத்திய அரசின் இந்த திட்டம் கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது.

கரகதஅள்ளி ஊராட்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வி:-

வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்கும் இந்த திட்டம் மூலம் எங்களுக்கு பலன் கிடைத்துள்ளது. வறட்சி காலங்களில் குடிநீரை தேடி அலையும் சூழல் இப்போது மாறி உள்ளது. இந்த குடிநீர் குழாயில் தினமும் தண்ணீர் விடப்படுகிறது. இந்த பகுதியில் இதுவரை டெபாசிட் தொகை வாங்கவில்லை. பெரும்பாலான நாட்களில் ஒகேனக்கல் குடிநீர் வினியோகிக்கிறார்கள். மழை குறைந்து வறட்சி ஏற்படும் காலங்களிலும் இந்த திட்டம் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் குழாய்களை பழுதடையாமல் முறையாக பராமரிக்க வேண்டும்.

சுத்தம் செய்ய வேண்டும்

கர்த்தாரபட்டியை சேர்ந்த சாக்கியம்மாள்:-

வீட்டுக்கே நேரடியாக குடிநீர் குழாய் அமைத்து கொடுத்திருப்பது சந்தோசமாக இருக்கிறது. இதன் மூலம் பெண்களின் வேலை குறைந்துள்ளது. இந்த குடிநீரை வழங்கும் தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். மழை குறைந்து தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களிலும் இந்த குழாய்கள் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். அதற்கான நீர்ஆதாரங்களை புதிதாக உருவாக்க வேண்டும். இன்னும் பல கிராமப்புறங்களில் குடிநீர் வினியோகம் இல்லாத நிலை உள்ளது. இந்தியாவெங்கும் குடிநீர் பிரச்சினை இல்லாத நிலை வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

-------------------------

டெபாசிட் கட்டணம் கேட்கிறார்கள்

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்தும் கிராம ஊராட்சிகள் அங்கு வசிக்கும் மக்களின் நிதி நிலைமைக்கு ஏற்ப குடிநீர் இணைப்பு வழங்கும்போது முன்வைப்பு தொகையாக (டெபாசிட்) ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை பெறலாம். குடிநீர் வினியோகிக்கப்படும் இணைப்புகளுக்கு ஒரு மாதத்திற்கு தலா ரூ.50 கட்டணம் வசூலிக்கலாம் என்ற நடைமுறை உள்ளது.

ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் 15-வது நிதி குழு மானியத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தபடுவதால் குடிநீர் இணைப்புகள் வழங்க பெரும்பாலான ஊராட்சிகளில் டெபாசிட் தொகை மற்றும் மாத கட்டணம் வசூலிக்கப்படவில்லை. சில ஊராட்சிகளில் டெபாசிட் தொகை கேட்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

-----------------


Next Story