ஊராட்சிமன்ற அலுவலகத்தை குடிநீர் சூழ்ந்தது
பெரியவாளவாடியில் குழாய் உடைந்ததில் ஊராட்சி மன்ற அலுவலகம்,கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை குடிநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
குடிநீர் பற்றாக்குறை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஆதாரமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ள திருமூர்த்தி அணையின் மூலமாக உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுகுடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தளி கால்வாயை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த சூழலில் வாளவாடி பகுதியில் பூலாங்கிணர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
4 நாட்களாக வீணாகும் குடிநீர்
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அடிப்படை அத்தியாவசிய தேவையில் தண்ணீரின் பங்கு முக்கியமானதாகும். பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை அளித்து உதவுவதில் கூட்டு குடிநீர் திட்டங்கள் பெரிதும் உதவிகரமாக உள்ளது. ஆனால் அதற்காக பதிக்கப்பட்ட குழாய்கள் ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வீணாகி வருவது வாடிக்கையாக உள்ளது. வாளவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அருகே பூலாங்கிணர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து கடந்த 4 நாட்களாக ஏராளமான தண்ணீர் வீணாகி வருகிறது.
இந்த தண்ணீர் ஊராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை சூழ்ந்து உள்ளது. இதனால் அந்தப் பகுதி சேறும், சகதியுமாக மாறி உள்ளதால் அலுவலக பயன்பாட்டுக்கு செல்லும் பொதுமக்கள் சேவையை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அதுமட்டுமின்றி தண்ணீர் வீணாகி வருவதால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் சேதமடைந்த குழாயின் வழியாக கழிவுநீர் கலந்து செல்வதால் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
அதிகாரிகள் அலட்சியம்
இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அணையிலும் நீர் இருப்பு வேகமாக சரிந்து வருகிறது. ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் பாதுகாத்து கவனத்துடன் கையாள வேண்டிய தற்போதைய சூழலில் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக தண்ணீர் யாருக்கும் உபயோகமில்லாமல் வீணாகி வருவது வேதனை அளிக்கிறது.
எனவே வாளவாடி பகுதியில் சேதம் அடைந்த பூலாங்கிணர் கூட்டுகுடிநீர் திட்டக்குழாயை உடனடியாக சீரமைத்து பொதுமக்களுக்கு சீரான தண்ணீர் வினியோகத்தை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் குடிநீர் குழாயில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்