தீராத குடிநீர் பிரச்சினையால் தொடரும் மறியல் போராட்டங்கள்
உடுமலை பகுதியில் குடிநீர் வினியோகத்தில் ஏற்படும் குளறுபடிகளால் தொடரும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
குடிநீர்ப்பிரச்சினை
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் குடிநீர் வினியோகத்தில் ஏற்படும் குளறுபடிகளால் நடைபெறும் சாலை மறியல் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
உடுமலை தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கண்ணாமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் முன்னிலை வகித்தார். உடுமலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குடிநீர்ப்பிரச்சினை உள்ள பகுதிகள் மற்றும் அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மடத்துக்குளம் ஒன்றியம்
பெரும்பாலான பகுதிகளில் குடிநீர்ப்பிரச்சினை ஏற்படுவதற்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று நேரடியாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தில் சீரான குடிநீர் விநியோகிக்கவும், குடிநீர்ப்பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. உடுமலை பகுதிகளைப்போலவே மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரு சில ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர்ப்பிரச்சினையும், போராட்டங்களும் தொடர்ந்து வருகிறது. எனவே ஆர்.டி.ஓ. தலைமையில் இதே போன்ற கூட்டத்தை நடத்தவும் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.