ரோட்டில் ஆறாக பாய்ந்த தண்ணீர்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 4-வது குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டம் தொடங்கி நடந்து வருகிறது. மாநகராட்சியின் வடக்கு பகுதியில் சோதனை ஓட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது தெற்கு பகுதியில் சோதனை ஓட்டம் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு மேல்நிலைத்தொட்டிக்கும் தண்ணீர் ஏற்றி சோதனை நடத்துவது, புதிதாக அமைக்கப்பட்ட குழாய்களில் அடைப்பு ஏதும் உள்ளதா? என்பது குறித்து தண்ணீரை வெளியேற்றி சோதனை நடக்கிறது.
திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்புறம் உள்ள மேல்நிலைத்தொட்டிக்கு 4-வது திட்ட குடிநீரை திறந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. நேற்று மதியம் திடீரென்று தண்ணீரை திறந்து விட்டதால் கண் இமைக்கும் நேரத்தில் தண்ணீர் ரோட்டில் பாய்ந்தது. ஆறுபோல் சாலையெங்கும் நீண்டதூரம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகன ஓட்டிகள் சிறிது சிரமப்பட்டனர். பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாவதாக நினைத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகே சோதனை ஓட்டம் என்பதை அறிந்ததும் கலைந்து சென்றனர். இருப்பினும் வெயில் காலத்தில் சாலைகள் சூட்டெரித்த நிலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் உஷ்ணம் தணிந்தது. சாலையில் தண்ணீர்பெருக்கெடுத்து ஓடியதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.