மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறுவை சாகுபடிக்கு போதாது:
கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்குரிய தண்ணீரை பெற வேண்டும்
மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறுவை சாகுபடிக்கு போதாது என்பதால் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்குரிய தண்ணீரை பெற வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முறைப்பாசனம் கூடாது
டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டாக பேட்டி அளித்தனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க துணை செயலாளர் வெ.ஜீவக்குமார் கூறும்போது கல்லணையில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமானால், தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வழங்க வேண்டும். கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் சென்று சேரும் வரை முறைப்பாசனம் வைக்க கூடாது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 88 ஆயிரம் ஏக்கரிலும், 2021-ம் ஆண்டு 1 லட்சத்து 44 ஆயிரம் ஏக்கரிலும், 2022-ம் ஆண்டு 1 லட்சத்து 86 ஆயிரம் ஏக்கரிலும் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதை மிஞ்சும் அளவுக்கு சாகுபடி செய்யப்படும். பாசனத்திற்காக மட்டும் 108 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். எனவே கோர்ட்டு மூலம் கர்நாடகஅரசுக்கு அழுத்தம் கொடுத்தும், மத்தியஅரசை வலியுறுத்தியும் தமிழகத்திற்குரிய தண்ணீரை பெற வேண்டும் என்றார்.
டெல்லியில் போராட்டம்
தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறும்போது, மேட்டூர் அணையில் தற்போது உள்ள தண்ணீர் 30 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு உரிய ஜூன் மாதம் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் விடுவதற்கு தயாராக இல்லை. எனவே இது தொடர்பாக சுப்ரீம் ்கோர்ட்டில் வழக்கு தொடுக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகத்திடம் இருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதத்துக்குரிய தண்ணீரைப் பெற்றால் மட்டுமே ஒருபோக சாகுபடியாவது மேற்கொள்ள முடியும். மாதம் தோறும் கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்குரிய தண்ணீரை தமிழகஅரசு கேட்டு பெற வேண்டும். ஜூன் மாதத்துக்குரிய தண்ணீர் வரவில்லை என்றால் புதுடெல்லியில் அடுத்தமாதம் (ஜூலை) 1-ந் தேதி 1,000 விவசாயிகளை அழைத்துச் சென்று போராட்டம் நடத்துவோம் என்றார்.
பயிர்க்கடன்
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் கூறும்போது, குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது மேட்டூர் அணையில் 68 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. மே மாத கணக்குப்படி இன்னும் 1½ டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகாவில் இருந்து வர வேண்டும். குறுவை சாகுபடி தொடங்கிய நிலையில் தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து பெற்று தர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறுவை தொகுப்பு வழங்குவதில் காலதாமதம் ஏற்படக்கூடாது. கூட்டுறவு கடன் சங்கங்களில் அதிகாரம் தலைதூக்கி ஆடுகிறது. ஆள்பார்த்து தான் கடன் கொடுக்கிறார்கள். எனவே முதல்-அமைச்சர் அதிகாரிகளை அழைத்து பேசி அனைவருக்கும் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடகஅரசு அணை கட்டினால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி விடும். இதை தமிழகஅரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
அச்சம்
தமிழக விவசாயிகள் சங்க கூட்டியக்க தலைவர் காவிரி தனபாலன் கூறும்போது, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டால் தான் கடைமடை வரை தண்ணீர் சென்றடையும். இவ்வளவு தண்ணீர் திறந்தால் 30 நாட்களுக்கு தான் தண்ணீர் வரும். 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டால் 40 நாட்களுக்கு தான் தண்ணீர் வரும். இதனால் அச்சத்துடனே குறுவை சாகுபடியை தொடங்குகிறோம்.
ஜூன், ஜூலை மாதத்துக்கு உரிய மாதாந்திர பங்கீடு தண்ணீரை கர்நாடக அரசு கொடுத்தால் தான், குறுவை சாகுபடியை செய்ய முடியும். இப்போதுள்ள தண்ணீரை வைத்து குறுவை சாகுபடி செய்யமுடியாது. எனவே, தமிழக அரசு உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய அரசிடமும் முறையிட்டு தமிழகத்துக்கு உரிய நீரை பெற்றுத் தந்தால் மட்டுமே குறுவை சாகுபடியை நீர் பற்றாக்குறையின்றி தொடர முடியும். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் இப்போது வரக்கூடிய தண்ணீர் கூட வர வாய்ப்பு இல்லை. தமிழகத்தின் உரிமையை பாதிக்கக்கூடிய இந்த திட்டத்தை தமிழகஅரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.