காட்சி பொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள்


காட்சி பொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள்
x
திருப்பூர்


உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களில் குடிநீர் வராததால் பயணிகள் தாகம் தீர்க்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நகராட்சி பகுதியில் குடிநீர்

உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை நகராட்சி பகுதிக்கு பிரதான குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு நகராட்சி பகுதியில் ஆங்காங்கு உள்ள மேல்நிலை குடிநீர்த்தொட்டிகளில் ஏற்றப்பட்டு, பின்னர் அங்கிருந்து பகிர்மான குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதனால் மற்ற ஊர்களை ஒப்பிடும்போது உடுமலை நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வருவதில்லை. அதேசமயம் மத்திய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு நகராட்சியின் குடிநீர் கிடைப்பதில்லை.

உடுமலை மத்திய பஸ்நிலையத்தில் ஆங்காங்கு பெரிய அளவிலான பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த தொட்டிகள் பழனி பஸ்கள் நிற்குமிடம், திருப்பூர் பஸ்கள் நிற்குமிடம் உள்ளிட்ட, பயணிகள் நிழற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் 4 இடங்களில் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்காக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

நாற்காலிகளால் தடுப்பு

இதில் பழனிக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள பயணிகள் நிழற்கூரை பகுதியில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தின் முன்பு நாற்காலிகள் போடப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குடிநீர் குழாயில் யாரோ, பயன்படுத்தப்பட்ட முககவசத்தை மாட்டி வைத்துள்ளனர்.

மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளில் இருந்து, சுத்திகரிப்பு எந்திரம் உள்ள தொட்டிகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த சுத்திகரிப்பு எந்திரத்தின் மூலம் குடிநீரை பிடித்து பருகி வந்தனர். சில பயணிகள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களிலும் பிடித்து சென்றனர்.

பயணிகள் அவதி

ஆனால் கடந்த சுமார் 4 மாதங்களுக்கு மேலாக இந்த குடிநீர்தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்படுவதில்லை. குடிநீர் சுத்திகரிப்பு எந்திரமும் செயல்பாட்டில் இல்லை.

இந்த குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதடைந்திருந்தால் ஒட்டு மொத்தமாக மத்திய பஸ் நிலையத்தில் உள்ள 4 எந்திரங்களும் ஒரே சமயத்தில் பழுதடைய வாய்ப்பில்லை என்றுகூறப்படும் நிலையிலும், இவை செயல்படாமலிருப்பதற்கு காரணம் என்ன என்று தெரியாமலுள்ள நிலையிலும், பயணிகள் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று தண்ணீர் பாட்டில்களை விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

இதற்காக சில பயணிகள் அவசர, அவசரமாக ஓடுகின்றனர். இவ்வாறு உடுமலை மத்திய பஸ்நிலையத்தில் பயணிகள் குடிநீருக்காக சிரமப்பட்டு அலைமோதுகின்றனர்.

கோரிக்கை

அதனால் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் காட்சி பொருளாக உள்ள பிளாஸ்டிக் தொட்டிகளில் குடிநீரை நிரப்பி, சுத்திகரிப்பு எந்திரங்கள் மூலம் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story