திண்டுக்கல்லில் 48 வார்டுகளுக்கும் காமராஜர் அணை குடிநீர் வினியோகம்; மாநகராட்சி கூட்டத்தில் தகவல்
திண்டுக்கல்லில் 48 வார்டுகளிலும் ஆத்தூர் காமராஜர் அணை குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் 48 வார்டுகளிலும் ஆத்தூர் காமராஜர் அணை குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சி கூட்டம்
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம், மேயர் இளமதி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொறியாளர் முருகேசன், நகர்நல அலுவலர் இந்திரா உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 135 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பஸ் நிலையத்தில் டேன் டீக்கடை அமைக்கும் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
ராஜ்மோகன் (அ.தி.மு.க.):- பூ மார்க்கெட், காந்தி காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகியவற்றுக்கு செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அவற்றை சுகாதாரமாக வைக்க வேண்டும்.
மேயர்:- 3 மார்க்கெட்டுகளையும் பார்வையிட்டு சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தனபாலன் (பா.ஜனதா):- பாதாள சாக்கடை இணைப்புக்கு முன்வைப்பு தொகை, இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பின்னர் இணைப்பு கொடுக்கும் போது ஒரு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனந்த் (தி.மு.க.):- பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் விவரத்தை மாநகராட்சி அலுவலத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
பொறியாளர்:- பாதாள சாக்கடை இணைப்புக்கு 20 அடி தூரத்துக்கு கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதைவிட கூடுதல் தூரம் வந்தால் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சாக்கடை கால்வாய்
பாஸ்கரன் (அ.தி.மு.க.):- வார்டுகளில் பணிகள் மேற்கொள்ளும்போது கவுன்சிலர்களிடம் தெரிவிப்பது இல்லை. இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கழிப்பறைகளை பராமரிக்க வேண்டும். பயணிகள், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு ஓய்வறை அமைக்க வேண்டும்.
துணை மேயர்:- எந்த பிரச்சினையாக இருந்தாலும் மேயர், துணை மேயரிடம் நேரடியாக கூறுங்கள். கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் கழிப்பறை பராமரிப்பு பணியை கூட, கவுன்சிலருக்கு தெரிவிக்கவில்லை.
மேயர்:- கடந்த 10 ஆண்டுகளாக சாக்கடை கால்வாயை கூட தூர்வாரவில்லை. ஆனால் நாங்கள் சாக்கடை கால்வாய்களை தூர்வாரி வருகிறோம். திண்டுக்கல்லை சிறந்த மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஜோதிபாசு (மா.கம்யூ) :- பூங்காக்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்றன. அந்த பூங்காக்கள் கட்டுவதற்கு பதிலாக நகர்நல மையம், விளையாட்டு மைதானம் அமைத்தால் நன்றாக இருக்கும். பல பகுதிகளில் தெருவிளக்குகள் எரியவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நாகல்நகர் மேம்பாலத்தில் பாதி விளக்குகள் எரிவதில்லை.
கமிஷனர்:- திருச்சி போன்ற ஊர்களில் பூங்காக்களை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பராமரிக்கின்றனர். அதேபோல் திண்டுக்கல்லிலும் மேற்கொள்ள வேண்டும்.
கணேசன் (மா.கம்யூ) :- ஆத்தூர் காமராஜர் அணையில் பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
கமிஷனர்:- காமராஜர் அணையை 10 நாட்களுக்கு ஒருமுறை பார்வையிடுகிறோம். அணையை கண்காணிக்க அதிகாரிகள் உள்ளனர். அணையின் கரையை பலப்படுத்த 400 பனைமர விதைகள் நடப்பட்டுள்ளன. அணையில் இருந்து கூடுதலாக குடிநீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்மூலம் 48 வார்டுகளுக்கும் காமராஜர் அணையின் குடிநீர் வழங்கப்படும். இதுதவிர கூடுதல் காவிரி குடிநீர் திட்டம், வைகை அணை குடிநீர் திட்டம், பேரணை திட்டத்தை செயல்படுத்தவும் பணிகள் நடக்கின்றன.
தி.மு.க.வினர் குறுக்கீடு
ஜானகிராமன் (தி.முக.) :- நள்ளிரவில் போர்வெல் அமைப்பதால் நோயாளிகள் உள்பட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே காலை 6 மணிக்கு மேல் போர்வெல் அமைக்க அனுமதிக்க வேண்டும்.
உமாதேவி பாரதிமுருகன் (அ.தி.மு.க.) :- எனது வார்டில் போர்வெல்கள், சின்டெக்ஸ் தொட்டி அமைத்து மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். மேலும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசும் போது தி.மு.க. கவுன்சிலர்கள் குறுக்கிட்டு பேசுவதால் கோரிக்கைகளை முழுமையாக பேசமுடியவில்லை.
(உடனே தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து, அ.தி.மு.க. ஆட்சியில் பிற கட்சி கவுன்சிலர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததே இல்லை, வெளிநடப்பு தான் செய்து இருக்கிறோம் என்றனர்)
துணை மேயர்:- பொதுமக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்கட்சியினர் பேசுவதற்கு அனுமதி அளித்து, அவர்களின் கருத்துகளை கேட்பது தி.மு.க. அரசு மட்டும் தான். அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க.வினர் உள்பட பிற கட்சியினர் பேசுவதற்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை.
மேற்கண்டவாறு விவாதம் நடைபெற்றது.