கடல் உள்வாங்காததால் 3 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது; 200 பேர் மீட்பு
கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1½ லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனை கடல் உள்வாங்காததால் 3 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட 200 பேர் மீட்கப்பட்டனர்.
அண்ணாமலைநகர்:
கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பியது.
இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. காவிரியின் கடைமடை பகுதியான தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணைக்கு தண்ணீர் வந்தது. கீழணையில் இருந்து உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனால் கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொடியம்பாளையம் என்ற இடத்தில் வங்கக்கடலில் கலக்கிறது.
வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது
கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வந்ததால் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள பெராம்பட்டு, அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், கீழகுண்டலப்பாடி, திட்டுக்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கடல் உள்வாங்கவில்லை
இந்த நிலையில் இன்று காலை கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 52 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. கடல் சீற்றமும் அதிகமாக இருந்ததால் கொள்ளிடம் ஆற்றில் வந்த தண்ணீரை கடல் உள்வாங்கவில்லை. இதனால் ஆற்றில் தண்ணீர் எதிர்த்து நின்றது.
இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வந்த தண்ணீர் வீரன்கோவில் திட்டு, சின்னகாரமேடு, மேலத்திருக்கழிப்பாலை ஆகிய 3 கிராமங்களுக்குள் புகுந்தது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது வீட்டைவிட்டு வெளியேறி மேடான இடத்திற்கு சென்றனர்.
200 பேர் மீட்பு
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், தாசில்தார் ஹரிதாஸ், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் வெள்ளம் சூழ்ந்த 3 கிராமங்களையும் படகில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 பேரையும் அதிகாரிகள் மீட்டு, அந்த பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தனர். அவர்களுக்கு குடிநீர், உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே வீரன்கோவில்திட்டு கிராமத்தில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு செல்லும் சிமெண்டு சாலை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.