குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது
காரைக்குடியில் பெய்த பலத்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது.
காரைக்குடி,
காரைக்குடியில் பெய்த பலத்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது.
பலத்த மழை
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. சிவகங்கை மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் இங்குள்ள ஊருணிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதுதவிர பல்வேறு இடங்களில் உள்ள தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்துள்ளது.
காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது. காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை 8 மணி முதல் தொடங்கிய மழை மதியம் 2 மணி வரை நீடித்தது. இதனால் காலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்களும், பல்வேறு வேலைகளுக்கு சென்ற பொதுமக்களும் மழையில் நனைந்தபடியே சென்றனர்.
தண்ணீர் புகுந்தது
கடந்த 2 நாட்களுக்கும் மேல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காரைக்குடி காளவாய்பொட்டல், பாரதியார் தெரு, தேவர் குடியிருப்பு, என்.எஸ்.கே தெரு, அன்னை தெரசா தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
இதையடுத்து அந்த பகுதி நகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் தலைமையில் அங்கு மீட்பு பணிகள் தொடங்கியது. மேலும் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அங்கு வந்து தேங்கிய மழைநீரை மின்மோட்டார் மற்றும் ஜே.சி.பி எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணிகளை தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மழைநீர் வடிகால்
அப்போது அந்த பகுதி மக்கள் இங்கு நிரந்தரமாக மழைநீர் வடிகால் இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மழை பெய்தால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. எனவே இ்ங்கு நிரந்தரமாக வடிகால் அமைத்து அதை அரியக்குடி கண்மாய்க்கு கொண்டு சென்று இணைக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல் திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இந்த பகுதியில் நடைபெறும் தொழில்கள் மற்றும் சிங்கம்புணரி பகுதியில் நடைபெற்று வந்த கயிறு உற்பத்தி தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.