தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. சுவாமிமலையில் பலத்த காற்றில் பறந்து வீட்டின் மேற்கூரை மின்கம்பத்தில் தொங்கியது.
கும்பகோணம்:
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. சுவாமிமலையில் பலத்த காற்றில் பறந்து வீட்டின் மேற்கூரை மின்கம்பத்தில் தொங்கியது.
ஐராவதீஸ்வரர் கோவில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியில் உலக பிரசித்தி பெற்ற ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலலை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
பக்்தர்களின் வசதிக்காக தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை சுற்றி புல் தரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலின் முன்பகுதியில் உள்ள நந்தி மண்டபம் பகுதி தரைப்பகுதியில் இருந்து சுமார் 5 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், வெளியூர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவிலுக்குள் புகுந்த மழைநீர்
இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
மேலும் ஐராவதீஸ்வரர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. கோவில் வளாகத்தில் உள்ள புல்தரை மற்றும் நந்தி மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் 1 அடி வரை தேங்கி குளம் போல் காணப்பட்டது.
பக்தர்கள் சிரமம்
இதன் காரணமாக பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கோவிலுக்குள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். ஒரு சிலர் தேங்கி கிடக்கும் மழை நீரில் இறங்கி கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
உடனடியாக கோவில் நிர்வாகத்தினர் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்கம்பத்தில் தொங்கிய மேற்கூரை
இதேபோல் சுவாமிமலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. அப்போது சுவாமிமலை சின்னக்கடை வீதியை சேர்ந்த செல்வம் என்பவர் தனது வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பிலான மேற்கூரை காற்றில் பறந்து சின்னக்கடை வீதி- பெரிய சாலியர் தெரு சந்திக்கும் இடத்தில் இருந்த மின்கம்பங்களில் தொங்கியது. மழை காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மி்னவாரிய அதிகாரிகள், மின்கம்பத்தில் இருந்த இரும்பிலான மேற்கூரையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சுவாமிமலை போலீஸ் நிலையத்திற்கு அருகே உள்ள 2 புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழையால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
அய்யம்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பெய்த மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் நடவு செய்த குறுவை நெற்பயிரை எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற கவலையில் இருந்து வந்தோம்.
இந்த நிலையில் தற்போது பெய்த மழை கொண்டு நெல் பயிர்களை ஓரளவு காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் வளர்ச்சி பருவத்தில் உள்ள நெல் பயிருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதே சமயம் இந்த மழையால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் படுகை பகுதிகளில் நடைபெற்று வரும் செங்கல் சூளை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.