சாலையை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்
கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராம சாலைகளை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது.
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி அதன் உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் முக்கொம்பு மேலணை வழியாக கல்லணையை வந்தடைகிறது. கல்லணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் சீறிப்பாய்ந்து கடல்போல காட்சி அளிக்கிறது.
இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் திட்டு, பாலூறான் படுகை, சரஸ்வதி விளாகம், கீழவாடி, கோரை திட்டு ஆகிய பகுதிகளில் உள்ள 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கயிறு கட்டி மீட்பு
இதனால் அந்த பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு கரையோரம் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தினமும் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் நேற்றும் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. நாதல்படுகை கிராம சாலையை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், சாலையில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கயிறு கட்டி அதனை பிடித்தபடியே கரையை வந்தடைந்தனர்.
ஆற்றின் கரையோர பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு நோய் தாக்கம் இருக்கிறதா? என்பதை கால்நடைத்துறையினர் கண்டறிந்து அவற்றின் உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். இந்த வெள்ளத்தின் காரணமாக கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நாதல் படுகை, முதலைமேடு திட்டு, வெள்ள மணல், கோரை திட்டு உள்ளிட்ட கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர்.
எம்.எல்.ஏ. ஆய்வு
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நாதல் படுகை, முதலைமேடு திட்டு, வெள்ள மணல், கோரை திட்டு உள்ளிட்ட கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். இந்தநிலையில் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் ஆய்வு செய்தார். பின்னர் முதலைமேடு திட்டு கிராமத்திற்கு சென்று கொள்ளிடத்தில் நீர் வரத்தை பார்வையிட்டார்.
அப்போது தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.