ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு1.40 லட்சம் கனஅடியாக குறைந்தது
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடியாக குறைந்தது.
பென்னாகரம்:
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடியாக குறைந்தது.
நீர்வரத்து குறைய தொடங்கியது
கர்நாடக மற்றும் கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனால் 2 அணைகளின் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, ஐந்தருவிகளை மூழ்கடித்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.45 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த நிலையில் நேற்று பகல் 12 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போலீசார் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் போலீசார் தீயணைப்பு படையினர் வருவாய்த்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.