ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.45 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு-காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
பென்னாகரம்:
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
வெள்ளப்பெருக்கு
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவியை மூழ்கடித்தப்படி வெள்ள நீர் பாய்ந்தோடியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை, மாமரத்து கடவு பரிசல் துறையும் வெள்ளத்தில் மூழ்கியது.
கண்காணிப்பு
மேலும் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் கரையோர குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.