ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 90 ஆயிரம் கனஅடியாக குறைந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 90 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
x

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

தர்மபுரி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

தண்ணீர் திறப்பு குறைப்பு

கர்நாடக, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, ஐந்தருவிகளை மூழ்கடித்து சென்றன. மேலும் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்த நிலையில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் மழை பெய்வது குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 88 ஆயிரத்து 921 கனஅடியாக குறைக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக குறைய தொடங்கியது.

தடை நீடிப்பு

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல், சத்திரம், நாடார் கொட்டாய், ஊட்டமலை உள்ளிட்ட காவிரி கரையோர பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தபடி சென்றது.

நீர்வரத்து குறைந்தாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் விதித்த தடை தொடர்ந்து நீடிக்கிறது. நீர்வரத்தை தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.


Next Story