ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 98 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 98 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
பென்னாகரம்:
நீர்வரத்து குறைந்தது
கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ஒகேனக்கல்லில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இங்கு நேற்று முன்தினம் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கி வினாடிக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ய தொடங்கியதால் நேற்று ஒரு மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. பின்னர் மாலை 6 மணி நிலவரப்படி, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 98 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இருப்பினும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
சின்னாற்றில் வெள்ளம்
இதேபோன்று தர்மபுரி மாவட்டத்திலுள்ள பஞ்சப்பள்ளி அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட சின்னாற்று நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், பஞ்சப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீர் சின்னாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. சின்னாற்றில் இந்த நீர்வரத்தால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சின்னாற்றில், காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடி வந்து காவிரி ஆற்றில் கலப்பது குறிப்பிடத்தக்கது.