சாலையில் வழிந்தோடும் குடிநீர்
திருமருகல் அருகே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வழிந்தோடுகிறது. சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வழிந்தோடுகிறது. சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர்குழாயில் உடைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலம் நாகை மாவட்டம் திருமருகல் அருகே டேங்கில் சேகரிக்கப்படுகிறது. இதில் இருந்து ராட்சத குழாய் மூலமாக திட்டச்சேரி, நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி வழியாக வேதாரண்யம் வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் குடி தண்ணீர் இதன் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் தேரடி அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையில் செல்கிறது.
தேரோட்டம்
குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் பெறும் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது. மேலும் சாலையோரம் வீணாகும் குடிநீர் பள்ளங்களில் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
மேலும் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து சாலை முழுவதும் செல்லும் தண்ணீரால் தேரோட்டம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மேற்கண்ட பகுதியில் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.