சாலையில் ஓடும் தண்ணீர் ஆசனூர் மலைக்கிராமத்தில் நடக்க முடியாமல் சிரமப்படும் மக்கள் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?
உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?
ஆசனூரில் மலைக்கிராம சாலையில் தண்ணீர் நிறைந்து, சேறும் சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மலைக்கிராம சாலை
தாளவாடி மலையில் அமைந்து உள்ளது ஆசனூர் கிராமம். மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அங்குள்ள ஸ்ரீசாய் நகர் மற்றும் பழைய ஆசனூர் கிராமத்துக்கு செல்லும் மண் ரோடு உள்ளது. ஆசனூரில் இருந்து சுமார் 200 அடி தூரம் மண்ரோட்டில் நடந்து சென்றால் அங்கு மிகப்பெரிய பள்ளம் உள்ளது. அது காட்டாறாகும்.
மழைக்காலத்தில் இங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். காட்டாற்றை கடந்து மேட்டில் ஏறி சிறிது தூரம் சென்றால் மீண்டும் காட்டாற்று பள்ளம் உள்ளது.
அங்கு எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது. சாலை சேறும் சகதியுமாக கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
வேண்டுகோள்
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த காளியம்மாள் என்ற பெண் கூறியதாவது:-
ஆசனூரில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எங்கள் கிராமத்துக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். தாளவாடி அல்லது சத்தியமங்கலம் சென்று விட்டு பஸ்சில் வந்து நடந்து செல்கிறோம். ஆனால் இந்த ரோடு மிகவும் கரடு முரடாக இருக்கிறது. தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக இருப்பதால் பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே வேறு சாலையில் சுற்றி செல்லவேண்டியது உள்ளது.
எனவே இந்த மண்ரோட்டை தார் ரோடாக மாற்றியும், காட்டாற்று பள்ளத்தில் உயர்மட்ட பாலம் அமைத்தும் தந்தால் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மலைக்கிராம மக்களுக்கு பயன் உள்ளதாக அமையும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.