ரூ.81.46 கோடியில் 33 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம்
பாரூர் ஏரியில் இருந்து ரூ.81.46 கோடி மதிப்பில் 33 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு கால்வாய் அமைக்கும் பணியை கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
மத்தூர்
பாரூர் ஏரியில் இருந்து ரூ.81.46 கோடி மதிப்பில் 33 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு கால்வாய் அமைக்கும் பணியை கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
நீர்வழங்கும் திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி தாலுகாக்களில் உள்ள 33 ஏரிகள் மற்றும் 8 தடுப்பணைகளுக்கு பாரூர் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு சென்று நிரப்ப வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்்தனர். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.81 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார்.
இதையடுத்து போச்சம்பள்ளி தாலுகா பாரூர் ஏரியின் கிழக்கு பிரதான கால்வாய் நெடுகை 15.95 கி.மீட்டரில் இடது வலது புறத்தில் ஒரு புதிய வழங்கு கால்வாய் வெட்டி, பெண்ணையாற்றில் வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை தாலுகாக்களில் உள்ள 33 ஏரிகள் மற்றும் 8 தடுப்பணைகள் ஆகியவற்றிற்கு கொண்டு சென்று பயன்பெறும் வகையில் ரூ.81 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வழங்கு கால்வாய் திட்டபணிகள் தொடங்கப்பட்டது.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
மத்தூர் ஒன்றியம் சூலகரை கிராமத்தில் நடைபெற்ற கால்வாய் வெட்டும் பணிக்கான தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். செல்லக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பர்கூர் மதியழகன், ஊத்தங்கரை தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-
இந்த திட்டத்தின் நீர் தேவை 83.71 மில்லியன் கன அடி ஆகும். இந்த நீரை 22 நாட்களில் வழங்க கால்வாய் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாய் மூலம் ஊத்தங்கரை மற்றும் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போர்கலப்பள்ளி, கீழ்குப்பம், தண்ணீர்பந்தல், இனாம்காட்டுப்பட்டி, கட்டேரி, ஒன்னகரை, கஞ்சனூர், சூளகரை, மல்லாபுரம், பாரண்டப்பள்ளி, தாதம்பட்டி, ரெட்டிப்பட்டி ஆகிய 12 கிராமங்களில் உள்ள 1,341 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
மேலும், இந்த திட்டத்தினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆண்டு முழுவதும் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இத்திட்டத்திற்கு விரிவான ஆய்வு பணிகள் மற்றும் நில ஆர்ஜிதம் செய்வதற்கு ரூ.14 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.20 லட்சம் விரிவான ஆய்வு பணிகள் மற்றும் மண் தன்மை ஆராய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், நில எடுப்பு பணிக்காக ரூ.13 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நில எடுப்பு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.
பேச்சுவார்த்தை
இந்த திட்டத்திற்கு தனியார் பட்டா நிலம் 39.06 ஹெக்டேரும், புறம்போக்கு நிலங்கள் 4.77 ஹெக்டேரும் தேவைப்படுகிறது. 12 கிராமங்களில் நிலம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. தற்போது 20.03 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. 19.02 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்த வேண்டி உள்ளது. மேலும், பணிகள் வரைவாகவும், தரமாகவும் முடித்து விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை செயற்பொறியாளர் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. நரசிம்மன், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயலட்சுமி, உஷாராணி குமரேசன், மாவட்ட கவுன்சிலர் கதிரவன், தாசில்தார் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், துரைசாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.