கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொடிவேரிஅணை
கோபி அருகே கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவ்வாறு வரும் பயணிகள் அணையில் இருந்து அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வர். பின்னர் அங்குள்ள மீன் கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன் வறுவல்கள் வாங்கி உண்பர். மேலும் தாங்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை உறவினர்களுக்கு பகிர்ந்து அளித்தும் உண்பர்.
வெள்ளப்பெருக்கு
இந்தநிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக கொடிவேரி அணையில் தண்ணீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க பொதுப்பணித்துறை தடை விதித்து உள்ளது. மேலும் அருவிபோல் தண்ணீர் கொட்டுவதால் அதிக அளவில் மீன்கள் துள்ளி குதிக்கின்றன. இதை வேடிக்கை பார்க்க அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்குள்ள பாலம் பகுதியில் குவிந்தனர். அவர்கள் பாலத்தில் நின்றவாறு கொடிவேரி அணையின் இயற்கை காட்சியை புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.