குற்றாலத்தில் கொளுத்தும் வெயிலில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குற்றாலத்தில் கொளுத்தும் வெயிலில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்தில் பலத்த மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வருகிறது. இன்று கடுமையான வெயில் குற்றாலத்தில் காணப்பட்டது.
இருப்பினும் அருவிகளில் தண்ணீர் வற்றாமல் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்.
மெயின் அருவியில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக இருந்ததால் அவர்களை நீண்ட வரிசையில் நிறுத்தி போலீசார் குளிக்க ஏற்பாடு செய்தனர். மெயின் அருவியை விட ஐந்தருவியில் மிகவும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.