ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர்அளவை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்:கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்
ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் அளவை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
ஸ்ரீவைகுண்டம்:
ஏரல், மங்களக்குறிச்சி, வாழவல்லான் பகுதி மக்களின் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீரின் அளவை தினமும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கலெக்டர் ஆய்வு
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து மங்களக்குறிச்சி, ஏரல், வாழவல்லான் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக வாழவல்லான் நீரேற்று நிலையத்திற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீரை திறந்து விட்டார். இந்த நிலையில் கலெக்டர் செந்தில்ராஜ் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைக்கு வந்தார். அவர் தடுப்பணையில் தண்ணீரில் அளவு, வாழவல்லான் நீரேற்று நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
அங்கு தாமிரபரணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் ஆதிமூலம், குமார் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அணையில் தண்ணீரின் இருப்பு, நீரேற்று நிலையத்திற்கு எத்தனை நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும், மற்ற நீரேற்று நிலயங்களின் நிலை என்ன, அணைக்கு தாமிரபரணி ஆற்றிலுள்ள தண்ணீர் வரத்து உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். அணையில் தண்ணீரின் அளவை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தாமிரபரணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் கண்மணி, உதவி செயற்பொறியாளர்கள் ஆதிமூலம், குமார், தாசில்தார்கள் சிவக்குமார், கைலாச குமாரசாமி ஆகியோர் உடனிருந்தனர்.