அணைகளில் நீர்மட்டம் உயர்வு
நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது
வழிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் வெயிலும், பிற்பகலில் மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் அணை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ்அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 112.53 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 76.85 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 175 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதுதவிர கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 46.25 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 13.25 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.49 அடியாகவும் உள்ளது.
இதேபோல் கடனா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 107 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 60 கனஅடி தண்ணீ்ர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. 85 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் 76.80 அடியாக உள்ளது.
84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 80.25 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 43 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் உள்ளது. 72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.49 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 5 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் உள்ளது. 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை நிரம்பி இருப்பதால் அணைக்கு வருகிற 14 கனஅடி தண்ணீர் அப்படியே மறுகால் பாய்ந்து செல்கிறது. இதேபோல் 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நிரம்பி விட்டதால் அணைக்கு வருகிற 46 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.