கிருஷ்ணகிரி அணையில் இருந்து 3,896 கனஅடி தண்ணீர் திறப்பு
தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 3,896 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 3,896 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் இரவு அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. ஆனால் தமிழகத்தில் மழை நீடித்தபடி உள்ளது. இந்த புயலால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முன்தினம் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரம்பியது. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் நிலைகளான கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, பாம்பாறு அணை, சூளகிரி சின்னார் அணை என அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று காலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி அணைக்கு வினாடிக்கு 2,854 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த அணையில் இருந்து வினாடிக்கு 2,344 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மாலை 4 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 3,896 கனஅடியாக அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3,896 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து அதிக அளவில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், அணையின் கீழ் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியபடி பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைக்கு கூடுதலாக தண்ணீர் வர வாய்ப்பு உள்ளதால், ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதனால் தென்பெண்ணை ஆறு ஓடும் பகுதிகளான கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என்றும், கால்நடைகளை குளிப்பாட்ட ஆற்றிற்கு அழைத்துவர வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது 40.34 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,037 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 980 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மழை அளவு
ஊத்தங்கரை பாம்பாறு அணையின் மொத்த உயரமான 10.60 அடியில் தற்போது 17.71 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,179 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,259 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சூளகிரி சின்னார் அணையின் மொத்த உயரமான 32.80 அடியில் தற்போது 32.80 அடி உயரத்திற்கு என முழு கொள்ளளவுடன் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 55 கனஅடி தண்ணீர் வருவதால் தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று காலை நிலவரபடி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாரூரில் 89 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதே போல் தேன்கனிக்கோட்டை-54.6, கிருஷ்ணகிரி-47.8, நெடுங்கல்-42, போச்சம்பள்ளி-32.6, கே.ஆர்.பி.டேம்-28, ராயக்கோட்டை-18, பெனுகொண்டாபுரம்-10.3, ஊத்தங்கரை-9, சூளகிரி-6, பாம்பாறு அணை-6, சின்னார் அணை-5, கெலவரப்பள்ளி அணை-4, ஓசூர்-2.3 மழை பதிவாகி இருந்தது.