கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு


டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு தஞ்சை, நாைக, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 3.42 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்


டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு தஞ்சை, நாைக, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 3.42 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கல்லணைக்கு வந்த தண்ணீர்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம் போல் ஜூன் 12-ந் தேதியோ அல்லது அதன் பிறகோ தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு வழக்கம் போல் டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்துவிட்டார். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை நேற்றுமுன்தினம் மாலை வந்தடைந்தது.

திறப்பு

கல்லணைக்கு வந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணை நேற்று காலை 9.45 மணியளவில் திறக்கப்பட்டது.

கல்லணையில் இருந்து வினாடிக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் தலா 500 கன அடி வீதமும், கல்லணை கால்வாயில் வினாடிக்கு 100 கன அடி வீதமும் தண்ணீரை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், செ.ராமலிங்கம், எஸ்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பொத்தானை அழுத்தி திறந்து வைத்து ஆறுகளில் மலர்கள், நவதானிங்களைத் தூவி வணங்கினர்.

சிறப்பு பூஜை

கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் குறுவை பருவத்தில் தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 951 ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 214 ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 805 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 93 ஆயிரத்து 750 ஏக்கரும், கடலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 976 ஏக்கரும் என மொத்தம் 3 லட்சத்து 42 ஆயிரத்து 696 ஏக்கர் பாசன வசதி பெறும். முன்னதாக கல்லணையில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கருப்பண்ணசாமி கோவில் மற்றும் கல்லணை பூங்காவில் உள்ள ஆதி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் மன்னன் கரிகாலன், ராஜராஜ சோழன் மற்றும் அகத்தியர், என்ஜினீயர் ஆர்தர் காட்டன், விவசாயி, மீன் பிடிக்கும் பெண், காவிரி அம்மன் ஆகிய சிலைகளுக்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.

கலெக்டர்கள்

நிகழ்ச்சியில் கலெக்டர்கள் தீபக் ஜேக்கப் (தஞ்சை), பிரதீப்குமார் (திருச்சி), மகாபாரதி (மயிலாடுதுறை), சாருஸ்ரீ (திருவாரூர்), ஜானிடாம் வர்கீஸ் (நாகை), மெர்சிரம்யா (புதுக்கோட்டை), எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மாநகராட்சி மேயர்கள் சண்.ராமநாதன் (தஞ்சை), அன்பழகன் (திருச்சி), நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர்கள் முருகேசன், சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story