வைகை அணையில் இருந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பு


வைகை அணையில் இருந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பு
x

பெரியாறு பாசன விவசாயிகளுக்காக வைகை அணையில் இருந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

மதுரை


மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. வேளாண்மை துறை இணை இயக்குனர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் பகுதி பிரச்சினைகளை பற்றி பேசினர்.

அப்போது அவர்கள், வைகை மற்றும் முல்லை பெரியாறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருக்கிறது. எனவே உடனடியாக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த முறை முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை கட்டாயம் தேக்க வேண்டும் என்றனர். அதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறையினர், அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் பெரியாறு பாசன விவசாயிகளுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கலாம் என அரசுக்கு குறிப்புரை அனுப்பப்பட்டு உள்ளது. அரசு உத்தரவிடும் பட்சத்தில் தண்ணீர் திறந்து விடப்படும் என்றனர்.

பின்னர் கலெக்டர் அனிஷ் சேகர் பேசியதாவது:-

மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் (2021) மொத்தம் 1090.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 153.09 மி.மீ மழை பெய்துள்ளது. தற்போது வைகை அணையில் 65.53 அடியும், பெரியார் அணையில் 131.80 அடியும் நீர் இருப்பு உள்ளது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இடுபொருட்கள், உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்பட்சத்தில் விவசாயிகள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தென்னை பண்ணை

உசிலம்பட்டியில் அதிக அளவு மல்லிகை பூ சாகுபடி நடக்கிறது. அதிகாலை எழுந்து பூவை பறித்து மதுரை சந்தைக்கு கொண்டு வரவேண்டும். காலதாமதமானால் விலை கிடைக்காது. அந்த பூ அனைத்தும் வீணாகி விடுகிறது.

எனவே உசிலம்பட்டியில் மல்லிகை பூ வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும். அரசு சார்பில் நடத்தப்படும் கால்நடை முகாம்களை அனைத்து கிராமங்களிலும் நடத்த வேண்டும். அப்போது தான் இந்த முகாம் பயன் உள்ளதாக இருக்கும். பல கிலோ மீட்டர் தூரங்களில் நடத்தப்படும் முகாமிற்கு அனைத்து கால்நடைகளையும் அழைத்து செல்வது எப்படி சாத்தியம் ஆகும்.

விவசாயிகளுக்கு வழங்கும் மின் இணைப்பை முன்னுரிமைப்படி தான் வழங்க வேண்டும். ஆனால் மாவட்டத்தில் 2004-ம் ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்காமல் 2014-ம் ஆண்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு வழங்குகிறார்கள். அதே போல் கடந்த காலங்களில் மும்முனை மின்சாரம் ஒரே நேரத்தில் வழங்கினார்கள். ஆனால் தற்போது எந்த நேரத்தில் வழங்குகிறார்கள் என்று விவசாயிகளுக்கு தெரியவில்லை. தங்கள் இஷ்டத்திற்கு வழங்குகிறார்கள்.

மதுரையில் தென்னை சாகுபடி அதிகஅளவில் நடக்கிறது. ஆனால் இங்கு அரசின் தென்னை நாற்று பண்ணை இல்லை. தனியாரிடம் இருந்து தென்னை நாற்று வாங்க வேண்டி உள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் தென்னை நாற்று பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு அரவை தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை அதற்கான முன்னேற்பாடு பணிகள் எதுவும் நடைபெற வில்லை.

கொள்முதல் நிலையங்கள்

மதுரை குலமங்கலத்தில் கடந்த மார்ச் மாதம் எந்த வித அனுமதியும் இல்லாமல் மஞ்சு விரட்டு போட்டி நடத்தப்பட்டது. ஆயிரம் மாடுகள் வரை இதில் பங்கேற்றன. இந்த போட்டியால் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் இந்த போட்டியை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல முறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. நெல்கொள்முதல் நிலையங்களை சரியான இடத்தில் அமைக்க வேண்டும். அதே போல் கூட்டுறவுத்துறை மூலம் பெறப்பட்ட நெல்லுக்கு இன்னும் தொகை வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.


Next Story