கல்லணைக்கால்வாயில் இன்று தண்ணீர் திறப்பு


கல்லணைக்கால்வாயில் இன்று தண்ணீர் திறப்பு
x

நிறுத்தப்பட்டு 4 நாட்களுக்குப்பிறகு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கல்லணைக்கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. குறுவை சாகுபடி செய்த வயல்களை பார்வையிட்ட நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

தஞ்சாவூர்

நிறுத்தப்பட்டு 4 நாட்களுக்குப்பிறகு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கல்லணைக்கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. குறுவை சாகுபடி செய்த வயல்களை பார்வையிட்ட நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

குறுவை சாகுபடி

டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது முன்பட்ட குறுவை நெல் அறுவடை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா நெல் நடவு செய்யப்பட்ட வயல்களில் கதிர்வரும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் கல்லணையில் இருந்து முறைவைத்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்படி கடந்த 18-ந்தேதி 1011 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 19-ந்தேதி 200 அடியாகவும், 20-ந்தேதி 100 கன அடியாகவும் குறைக்கப்பட்டது.

கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

இதையடுத்து 21-ந்தேதி முதல் கல்லணையில் இருந்து கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கல்லணைக்கால்வாய் பாசன பகுதிகளில் கதிர்வரும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. மேலும் கல்லணைக்கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் நேற்று கல்லணை கால்வாய் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டை, சூரக்கோட்டை, காட்டூர், வடுவூர், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குறுவை சாகுபடி செய்த விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

இன்று முதல் தண்ணீர் திறப்பு

அப்போது விவசாயிகள் குறுவை பாசனத்துக்கு கல்லணைக்கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கல்லணையில் இருந்து இன்று (திங்ட்கிழமை) முதல் கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்.


Next Story