தஞ்சை கல்லணைக்கால்வாயில் இருந்து அகழியில் தண்ணீர் திறப்பு


தஞ்சை கல்லணைக்கால்வாயில் இருந்து  அகழியில் தண்ணீர் திறப்பு
x

தஞ்சை கல்லணைக்கால்வாயில் இருந்து அகழியில் தண்ணீர் திறப்பு

தஞ்சாவூர்

1 மாதத்துக்கு பிறகு கல்லணைக்கால்வாயில் இருந்து அகழியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணை திறப்பு

டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்ததும், அங்கிருந்து 16-ந்தேதி பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கல்லணைக்கால்வாய் தஞ்சை பெரியகோவிலையொட்டி செல்கிறது. கல்லணைக்கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 17-ந்தேதி தஞ்சையை கடந்து சென்றது. இந்த கல்லணைக்கால்வாயில் இருந்து தஞ்சை கோட்டையை சுற்றியுள்ள அகழிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதற்காக பெரியகோவில் பின்பகுதியில் கல்லணைக்கால்வாயில் இருந்து அகழிக்கு தண்ணீர் திறப்பதற்கான மதகு உள்ளது. மன்னர்கள் காலத்தில் கோட்டையை பாதுகாக்க இந்த அகழி வெட்டப்பட்டது. இதில் தண்ணீர் நிரப்பப்படும் போது தஞ்சை மாநகரில் நிலத்தடி நீர் மட்டம் உயருவதோடு, கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அகழியில் தண்ணீர் திறப்பு

இந்த அகழி கடந்த 2018-ம் ஆண்டு தூர்வாரப்பட்டது. மேலும் அகழியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் அகழி பகுதிக்கு தண்ணீர் விடவில்லை. இதனால் அகழி வறட்சியாக உள்ளது என தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு 1 மாதத்துக்குப்பிறகு அகழிக்கு தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. இந்த அகழியில் தஞ்சை மாநகராட்சி 18 மற்றும் 19-வது வார்டுக்கு உட்பட்ட செக்கடி பகுதியில் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் அகழியின் குறுக்கே தடுப்பணை கட்டும்பணி கடந்த 6 மாதங்களுக்கும் முன்பு நடந்து முடிந்தன.

இதையடுத்து நேற்று அகழிக்கு தண்ணீர் வந்தடைந்தது. இதனை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாநகர கவுன்சிலர்கள் மேத்தா, தமிழ்வாணன், சசிகலா அமர்நாத், மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story