மூலவைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் மூலவைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக போதிய அளவு மழை இல்லாததால் மூலவைகை ஆற்றில் குறைந்த அளவில் மட்டும் நீர்வரத்து இருந்தது. இதற்கிடையே கடந்த 2 நாட்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் இன்று காலை திடீரென்று ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இருகரைகளையும் தொட்டபடி தற்போது ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வழக்கமாக வடகிழக்கு பருவமழையின் போது மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போதே மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், அடுத்த சில நாட்கள் வரை பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று கடமலை-மயிலை ஒன்றிய நிர்வாகம் சார்பில் ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் கிராமங்களில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.