பயனற்ற நிலையில் குடிநீர் கைப்பம்புகள்


பயனற்ற நிலையில் குடிநீர் கைப்பம்புகள்
x

பூதலூர் ஒன்றிய பகுதியில் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட கைப்பம்புகள் பயனற்ற நிலையில் உள்ளன. இவற்றை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்

பூதலூர் ஒன்றிய பகுதியில் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட கைப்பம்புகள் பயனற்ற நிலையில் உள்ளன. இவற்றை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கைப்பம்புகள்

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கு ஏற்ப கைப்பம்புகள் அமைக்கப்பட்டன.

சிறிய ஊராட்சி, பெரிய ஊராட்சி என பிரிக்கப்பட்டு அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் இதுபோன்ற கைப்பம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மினி தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றி அதன் மூலமாகவும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப் பகுதிகளிலும் சிறியதும், பெரியதுமாக ஏராளமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

பயனற்ற நிலையில்...

ஒவ்வொரு ஊராட்சிகளிலும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்புகள் வீடுகள் தோறும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைக்கப்பட்டு வரும் ஆழ்துளை கிணறுகள் பல்வேறு இடங்களில் செயல்படாமல் காட்சி பொருளாக காணப் படுகின்றன. ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் போது அந்த இடத்தில் குடிப்பதற்கு ஏற்றதாக தண்ணீர் கிடைக்குமா? என்று ஆய்வு செய்யாமல் அமைப்பதால் கைப்பம்பின் மேல் பாகங்கள் விரைவில் துருப்பிடித்து உடைந்த நிலையிலும் காணப்படுகின்றன.

பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சம் 50 வரை மொத்தம் 500-க்கு மேற்பட்ட பழுதான, பயனற்ற நிலையில் உள்ள கைப்பம்புகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

காட்சி பொருளாக...

ஒரு கைப்பம்பு அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து35 ஆயிரம் செலவு ஏற்படுகிறது. இந்த நிலையில் கைப்பம்புகள் காட்சி பொருளாக மட்டும் இருப்பது கிராம மக்களை வேதனை அடைய செய்துள்ளது. பூதலூர் ஒன்றியத்தில் காவிரி கரையோரம் உள்ள ஒரு ஊராட்சியில் அதிக அளவில் கைப்பம்புகள் அமைக்கப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை செயல்படாத நிலையில் உள்ளதாகவும் கூறுகின்றனர். இன்னமும் அந்த ஊராட்சி பகுதியில் பல தெருக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலையும் உள்ளது. பூதலூர் ஒன்றிய பகுதியில் செயல்படாத கைப்பம்புகளை அகற்றிவிட்டு, குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்து அதன்படி கைப்பம்புகள் அமைத்து கோடை கால தண்ணீர் பற்றாக்குறையை போக்க வேண்டும். பயனற்ற நிலையில் உள்ள குடிநீர் கைப்பம்புகளை சீரமைக்க வேண்டும். குடிநீருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை வீணாக்காமல் முறையாக செலவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story