அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தளி,
அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர்திறந்து விடப்பட்டுள்ளது.
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் ஆதாரத்தை அளித்து வருகிறது. அத்துடன் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றாறுகளும், ஓடைகளும் அணைக்கு நீர்வரத்தை ஏற்படுத்துவதில் பிரதான பங்கு வகிக்கிறது. இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு, குளம், கல்லாபுரம் வாய்க்கால் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
அதுதவிர சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஆறு மற்றும் கால்வாய்களை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அமராவதி அணையின் நீராதாரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து அமராவதி அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் அளவும் அதிகரித்து உள்ளது. அதன்படி கடந்த 5-ந் தேதி 65.85 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 71.36 அடியாக உயர்ந்து மூன்று நாட்களில் 5.51 அடி அதிகரித்து உள்ளது.
தண்ணீர் திறப்பு
அதேபோன்று பாசனப் பகுதிகளிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணிக்கு தயாராகி வருகின்றனர். மேலும் மழைப்பொழிப்பு அதிகரித்து அணை அதன் முழு கொள்ளவை நெருங்குமா? என்றும் விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். இதற்கிடையில் விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் பேரில் பழைய பாசனத்துக்கு உட்பட்ட 10 வாய்க்கால்களின் (அலங்கியம் முதல் கரூர் வலதுகரை வரை) பாசனப்பகுதியில் உள்ள குடிநீர் தேவை மற்றும் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றுவதற்காக நேற்று முதல் வருகின்ற 17-ந் தேதி வரையில் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர் தலைமையிலான பொதுப்பணித்துறையினர் அமராவதி ஆற்றில் தண்ணீரை திறந்து வைத்தனர்.மேலும் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
நேற்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 71.36 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2499 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 615 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.