அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தளி,
அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
அமராவதி அணை
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குடிநீர் மற்றும் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றுவதற்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் பிரதான கால்வாயில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.அதைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் கால்வாயில் அதிகாரிகள் தண்ணீர் திறந்து வைத்தனர்.
மகிழ்ச்சி
இந்த தண்ணீர் நேற்று முதல் அடுத்த மாதம் 11-ம் தேதி வரை 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் தேவை பூர்த்தி அடைவதுடன் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில் உள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றுவற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அமராவதி அணையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 67 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 316 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.