பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணையில் இருந்து 185 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்-கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணையில் இருந்து 185 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்-கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணையில் இருந்து வினாடிக்கு 185 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாணியாறு அணை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை உள்ளது. இந்த அணையில் 65.27 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும். சேர்வராயன் மலை தொடரில் பெய்யும் மழை நீரானது, இந்த அணைக்கு வருகிறது. இந்தநிலையில் மழை காரணமாக வாணியாறு அணைக்கு தொடர்ச்சியாக தண்ணீர் வந்தது.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 63 அடியாக உயர்ந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 50 முதல் 60 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, அந்த தண்ணீர் முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டது.

தண்ணீர் வெளியேற்றம்

இந்தநிலையில் சேர்வராயன் மலை தொடரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி அணைக்கு வினாடிக்கு 185 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே மதகுகள் வழியாக வாணியாற்றில் வெளியேற்றப்பட்டது.

பழைய ஆயக்கட்டு ஏரிகள் அனைத்தும் நிரம்பிய நிலையில், தற்போது அரூர் பெரிய ஏரிக்கு ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் வாணியாற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வாணியாற்றில் கால்நடைகளை குளிப்பாட்டவோ அல்லது துணி துவைக்கவோ கூடாது என்றும் தெரிவித்தனர்.


Next Story