வரட்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு-5,108 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்


வரட்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு-5,108 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

வரட்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீரை கலெக்டர் சாந்தி நேற்று திறந்து வைத்தார். இதன் மூலம் 5,108 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

தண்ணீர் திறப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா வள்ளி மதுரை கிராமத்தில் வரட்டாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி தண்ணீரை திறந்து வைத்தார்.

வரட்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து அடுத்த மாதம் (மார்ச்) 31-ந் தேதி வரை பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 25 ஏரிகளுக்கு வினாடிக்கு 30 கன அடி வீதம் 51.840 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள நேரடி பாசனத்திற்கு 20 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடி வீதம் 51.840 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும்.

5,108 ஏக்கர் பாசன வசதி

இதன்படி மொத்தம் 40 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 108 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் 103.68 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் வள்ளிமதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, புதூர், எல்லப்புடையாம்பட்டி, நாதியானூர், கெளாபாறை, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, மாவேரிபட்டி, கம்மாளபட்டி, செல்லம்பட்டி ஆகிய 15 கிராமங்கள் பயன்பெறஉள்ளன.

வரட்டாறு நீர்த்தேக்கத்தில் தற்போது உள்ள தண்ணீரின் அளவை கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பாசனத்தை மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் பிரபு, வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை துணை இயக்குனர் மாலினி, ஊராட்சி தலைவர் அமுதா மற்றும் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


Next Story