பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு-4,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
தர்மபுரி:
பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.
தண்ணீர் திறப்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி, பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவினர்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு 90 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும் வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முதல் பழைய ஆயக்கட்டு பகுதி ஏரிகளை நிரப்ப தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் மொத்தம் 4 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் பயனடையும் வகையில் மொத்தம் 451.49 மில்லியன் கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்பட உள்ளது.
சிக்கனம்
இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, அத்திமுட்லு மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, குஜ்ஜாரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெற உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி, நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் பாபு, உதவி பொறியாளர் சாம்ராஜ், பாலக்கோடு தாசில்தார் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன், மாவட்ட கவுன்சிலர் சரவணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.