மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் தண்ணீர் திறப்பு
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் தண்ணீர் திறப்பு.
தேனி,
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, வருகிற 5-ந்தேதி சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி வைகை அணையில் இருந்து நேற்று காலை 11 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. வினாடிக்கு 750 கனஅடி வீதம் சிறிய மதகுகள் வழியாக வைகை ஆற்றுப்படுகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நிலப்பரப்பு ஈரப்பதத்துடன் உள்ளதால் வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் வேகமாக மதுரை மாநகரை சென்றடையும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து மொத்தம் 26 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையே 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 53 அடியாக இருந்தது.