பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு


பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு
x

பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் அர.சக்கரபாணி மலர்தூவி வரவேற்றார்.

திண்டுக்கல்

பழனி அருகே பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மதகை திறந்து வைத்தார். இதையடுத்து அணை பகுதியில் மலர்தூவி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணி கூறுகையில், பாலாறு-பொருந்தலாறு அணையின் இடது பிரதான கால்வாய் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக அணையில் இருந்து இன்று (அதாவது நேற்று) முதல் வினாடிக்கு 70 கனஅடி வீதம் 110 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மானூர், கோரிக்கடவு, நெய்க்காரப்பட்டி, சின்னக்கலையம்புத்தூர், இரவிமங்கலம் உள்பட 16 கிராமங்களில் உள்ள 9 ஆயிரத்து 600 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். கடந்த ஆட்சி காலத்தில் 50 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து 110 நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து கூடுதலாக 10 நாட்கள் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதி, நீர்ப்பிடிப்பில் பெய்யும் மழையை பொறுத்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் காஜாமுகைதீன், செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் உதயக்குமார், உதவி பொறியாளர் அருண், பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார், பாலசமுத்திரம் பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் விஜய்கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story