திண்டுக்கல், கரூர் மாவட்ட பாசனத்திற்காக நங்காஞ்சியாறு அணையில் தண்ணீர் திறப்பு
திண்டுக்கல், கரூர் மாவட்ட பாசனத்திற்காக நங்காஞ்சியாறு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டையில் 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சியாறு அணை உள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் இந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இந்தநிலையில் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து நங்காஞ்சியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு, ஷட்டர் எந்திரத்தை இயக்கி அணையின் வலது மற்றும் இடது கால்வாய்களில் தண்ணீரை திறந்து வைத்தார். இதில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், நங்காஞ்சியாறு அணையில் இருந்து 40 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை, வலையபட்டி, சின்னக்காம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 615 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல் கரூர் மாவட்டத்தில் சேந்தமங்கலம் பகுதியில் 3 ஆயிரத்து 635 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். அந்த வகையில், திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் மொத்தம் 6 ஆயிரத்து 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றனர்.