விதிமுறைகளை மீறி நீர்நிலைகளில் வணிகத்திற்கு மண் எடுப்பதாக புகார்


விதிமுறைகளை மீறி நீர்நிலைகளில்   வணிகத்திற்கு மண் எடுப்பதாக புகார்
x
திருப்பூர்


மடத்துக்குளம் அருகே விதிகளை மீறி விவசாயிகள் என்ற பெயரில் வணிகப் பயன்பாட்டுக்கு நீர்நிலைகளில் மண் எடுப்பதாக புகார் தெரிவித்து வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கூறப்படுவதாவது:-

வணிகப்பயன்பாடு

மடத்துக்குளத்தையடுத்த குமரலிங்கம் பேரூராட்சி மதகடிப்புதூர் பகுதியில் உள்ளது ராமகுளம். இந்த குளத்தை அடிப்படையாகக் கொண்டு பல நூறு ஏக்கர்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தின் கீழ் ராமகுளத்திலும் விவசாயிகள் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சிலர் விவசாயப்பயன்பாட்டுக்கு என்ற பெயரில் அனுமதி பெற்று, செங்கல் சூளை உள்ளிட்ட வணிகப்பயன்பாட்டுக்கு 100 லாரிகளுக்கு மேல் மண் அள்ளியதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

இதனையடுத்து நேற்று ராமகுளம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பிஜேபியின் திரண்டு மண் அள்ளிய லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான அனுமதி இல்லாமல் விதிகளை மீறி அதிக ஆழத்தில், வணிகப் பயன்பாட்டுக்கு மண் எடுப்பதை அனுமதிக்க முடியாது என்று பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வாகனங்கள் மண் எடுக்காமல் திரும்பிச் சென்றன.

மேலும் அங்கு வந்த வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மண் எடுப்பதற்கான ஆவணங்களை ஆய்வு செய்து, உரிய ஆவணங்களின் அடிப்படையில் விவசாயப் பயன்பாட்டுக்கு மட்டுமே மண் எடுக்க அனுமதியளிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story