பருவமழை பொய்த்து குடிநீர்தட்டுப்பாடு ஏற்படும் நிலை:அனுமதி பெறாத ஆழ்துளை கிணறுகளை மூட வலியுறுத்தல்


தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து குடிநீர்தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருப்பதால் அனுமதி பெறாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

மாவட்டத்தில் பருவமழைபொய்த்து கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதால், அனுமதி பெறாத ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தனித்துணை கலெக்டர் (மனுக்கள்) ஜேன் கிறிஸ்டி பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தருவைகுளத்துக்கு வெளியூர் படகுகள்

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய கட்டளைதாரர்கள் ஜெயசிங், மகாராஜா, மிக்கேல் ரெக்ஸ் உள்ளிட்டவர்கள் தலைமையில் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'தருவைகுளம் கடற்கரையில் உள்ள மீன் வியாபாரிகள் கொடுத்த மனு தொடர்பாக ஊர் கட்டளைதாரர்கள் தலைமையில் விவாதிக்கப்பட்டது. இதில் தருவைகுளத்தில் உள்ள விசைப்படகுகள் வெளியூர்களில் மீன்கள் விற்பனை செய்வது போன்று, மற்ற வெளியூர் படகுகள் தருவைகுளத்தில் வந்து மீன்களை இறக்கி விற்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை அரசு ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டும'் என்று கூறி உள்ளனர்.

ஆழ்துளை கிணறுகளை...

சாயர்புரத்தை சேர்ந்த காங்கிரஸ் மாநில முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து விட்டது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. ஆகையால் அரசு அனுமதி இல்லாமல் போடப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும'் என்று கூறி உள்ளார்.

உள்ளூர் மக்களுக்கு பணி

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி செயலாளர் ஜேசுராஜ் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக உதவியாளர் நியமனத்தில் நடந்து உள்ள முறைகேடுகளை தடுத்து சரியான, தகுதியான நபருக்கு பணி நியமனம் வழங்க வேண்டும், பழையகாயல் பஞ்சாயத்து பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தத்தை மீறி பணியமர்த்தப்பட்ட வெளிமாநில தொழிலாளர்களை நீக்கி, உள்ளூர் மக்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

தலையாரி தேர்வை...

தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில தலைவர் காந்திமள்ளர் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் தலையாரி பணியிடத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரைப்படி ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஆகையால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும'் என்று கூறி உள்ளார்.


Next Story