நாகை போக்குவரத்து பணிமனை உணவகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு
நாகை போக்குவரத்து பணிமனை உணவகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடம், கேன்களில் தண்ணீர் நிரப்பி பஸ்சில் எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை போக்குவரத்து பணிமனை உணவகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடம், கேன்களில் தண்ணீர் நிரப்பி பஸ்சில் எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தண்ணீர் தட்டுப்பாடு
நாகையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இங்கிருந்து நாகை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சென்னை என பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள ஊழியர்களின் பயன்பாட்டுக்காக பணிமனையில் உணவகம் இயங்கி வருகிறது.
மதியம் பணி முடிந்து வரும் போக்குவரத்து பணியாளர்கள் உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உணவகத்துக்கு நகராட்சி சார்பில் வழங்கப்படும் தண்ணீர் முறையாக வருவதில்லை என்று கூறப்படுகிறது. எனவே உணவகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் உணவு தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
பஸ்சில் தண்ணீர் எடுத்து வந்தனர்
இதையடுத்து பணிமனையில் நின்ற அரசு பஸ்சில் குடம், கேன்களை ஏற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகை முதலாவது கடற்கரை நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்துக்கு சென்றனர். தொடர்ந்து அங்கிருந்து தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்தனர்.
உணவகத்தில் தண்ணீர் இல்லாவிட்டால் தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து இருக்கலாம். அல்லது ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களை அமர்த்தி அதன் மூலம் தண்ணீர் கொண்டு வந்து இருக்கலாம். அதை விடுத்து போக்குவரத்து பணியாளர்கள் பயணிகளை ஏற்றும் பஸ்சில் குடங்களில் தண்ணீர் பிடித்து சென்றதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொதுமக்கள் கேள்வி
போக்குவரத்துக்கழக பணிமனையில் உள்ள உணவகத்துக்கு தண்ணீர் இல்லையென்றால் நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தால் அவர்கள் லாரி மூலம் தண்ணீர் கொடுத்து இருப்பார்கள்.
அதை விடுத்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை சாலையில் சென்று ஏன் தண்ணீர் எடுத்து வர வேண்டும். பஸ்சில் தண்ணீர் எடுத்து வருவதற்கு அனுமதி உண்டா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த காலகட்டத்தில் அரசு பஸ்சை தண்ணீர் பிடிப்பதற்கு பயன்படுத்துவது அதிர்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போக்குவரத்து அலுவலரிடம் கேட்டபோது கடந்த 3 நாட்களாக தண்ணீர் வராத காரணத்தால் போக்குவரத்து ஊழியர்கள் உணவு சமைப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பஸ் மூலம் தண்ணீர் எடுத்து வந்ததாக தெரிவித்தனர்.
நாகை போக்குவரத்து கழகத்தில் 53 பஸ்களும், 4 மாற்று பஸ்களும் உள்ளது. மாற்று பஸ்களை பயன்படுத்தி தண்ணீர் எடுத்து வந்துள்ளோம். நகராட்சிக்கும் தண்ணீர் வரவில்லை என துறை சார்ந்த கடிதம் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.