குடிநீர் வினியோகம் சீராக இருந்தது யார் ஆட்சியில்?
குடிநீர் வினியோகம் யார் ஆட்சியில் சீராக இருந்தது? என்று திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது.
மாநகராட்சி கூட்டம்
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு மேயர் இளமதி தலைமை தாங்கினார். ஆணையர் மகேஸ்வரி, துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
மாரியம்மாள் (மா.கம்யூ) :- மாநகராட்சியில் பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து விட்டது. அதை விரைவாக சீரமைக்க வேண்டும்.
ஜான்பீட்டர் (தி.மு.க.) :- மாநகராட்சிக்கு வரும் காவிரி குடிநீரின் அளவு தொடர்பாக அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கிறார்களா?
சாமிநாதன் (உதவி பொறியாளர்) : காவிரி குடிநீர் வருவதை அளவீடு செய்ய கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது. அதை முறையாக ஆய்வு செய்து வருகிறோம்.
கணேசன் (மா.கம்யூ) :- காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீரை விலைக்கு வாங்கி மக்களுக்கு வழங்குகிறோம். ஆத்தூர் காமராஜர் அணையில் இருக்கும் 3 மோட்டார்களையும் முழுமையாக இயக்கினால் மாநகராட்சி முழுவதும் சப்ளை செய்யலாம். காவிரி குடிநீரை வாங்க வேண்டியது ஏற்படாது. திண்டுக்கல் பஸ்நிலையத்தில் மக்கள் வெயிலில் கால்கடுக்க நிற்கும் நிலை உள்ளது. எனவே மக்கள் ஒதுங்கி நிற்பதற்கு மேற்கூரை அமைக்க வேண்டும்.
துணை மேயர்:- ஆத்தூரில் 3 மோட்டார்களையும் இயக்கி அனைவருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிநீர் வினியோகம்
ஜோதிபாசு (மா.கம்யூ) :- மாநகராட்சி பகுதியில் நடைபெறும் அனைத்து பணிகளும் ஒரே நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இதனால் பணிகளை துரிதமாக முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். எனவே பிற நிறுவனங்களுக்கும் பணிகளை வழங்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒடுக்கம் குடிநீர் திட்டம் செயல்பாட்டில் இருந்தது. அதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் கோடைகாலத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் குடிநீர் வினியோகம் செய்யலாம்.
துணை மேயர்:- ஆத்தூர் காமராஜர் அணை கட்டும்போது மக்கள் தொகை 60 ஆயிரமாக இருந்தது. பின்னர் மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப பேரணை, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. 2010-ம் ஆண்டில் வைகை குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மக்களின் அடிப்படை வசதிகளை தி.மு.க. ஆட்சி சிறப்பாக செய்கிறது. வைகை குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு திண்டுக்கல் மாநகராட்சியில் சீராக குடிநீர் வழங்கப்படும்.
ராஜ்மோகன் (அ.தி.மு.க) :- அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகராட்சி பகுதிகளில் சீராக குடிநீர் வழங்கப்பட்டது.
மேயர்:- அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி குடிநீருக்கு பணம் செலுத்தாததே தட்டுப்பாடு ஏற்பட காரணம். நாங்கள் பொறுப்பேற்ற பின்னர் தொகையை முறையாக செலுத்தி வருகிறோம். காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டாலும் அதையும் சரி செய்து குடிநீர் வழங்குகிறோம்.
ஜான்பீட்டர் (தி.மு.க.) :- குடிநீர் வினியோகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
காந்தி மார்க்கெட் ஏலம்
ஆனந்த் (தி.மு.க.) :- தெருக்களின் பெயர் பலகையில் தெருவின் பெயர் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்து கெஜட்டில் இருப்பது போன்று எழுத வேண்டும்.
ஜான்பீட்டர் (தி.மு.க.) :- மருந்து கடைகளில் டாக்டரின் சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் விற்கப்படுகின்றன. அதேபோல் மாம்பழ குடோன்களில் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்படுகின்றன. இதுதொடர்பாக சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையர்:- இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தனபாலன் (பா.ஜ.க.) :- திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் காய்கறி வண்டிகள், காய்கறி மூட்டைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் குத்தகை ஏலம் 3 முறை ரத்து செய்யப்பட்டது ஏன்? தற்போது கட்டணம் வசூல் செய்வது யார்?
வில்லியம் சகாயராஜ் (உதவி வருவாய் அலுவலர்) :- காந்தி மார்க்கெட் ஏலம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. தற்போது மாநகராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
துணை மேயர்:- கடந்த முறையும் நீங்கள் இதே கேள்வியை தான் கேட்டீர்கள். அப்போதே அதற்குரிய பதிலை கொடுத்து விட்டோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
முன்னதாக பத்திரிகையாளர்கள் அமரும் பகுதியில் நாற்காலிகள் இல்லாததால் பத்திரிகையாளர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.