திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவில் கருவறையில் நீர் சூழ்ந்தது


திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவில் கருவறையில் நீர் சூழ்ந்தது
x

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவில் கருவறையில் நீர் சூழ்ந்தது.

அரியலூர்

கீழப்பழுவூர்:

1,600 ஆண்டுகள் பழமையான கோவில்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடியில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது‌. ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் 1,600 ஆண்டுகள் பழமையானது ஆகும். மேலும் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஓடும் கொள்ளிடம் ஆறு, இக்கோவில் முன்பு தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஓடுவதால் காசிக்கு நிகர் என்று கூறப்படுவது வழக்கம்.

இக்கோவிலில் நடைபெறும் நந்திபெருமான் திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றது. நந்தி திருமணம் பார்த்தால் முந்தி திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம் ஆகும். இதனால் திருமணமாகாதவர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணம் காண வருவார்கள்.

கருவறை வரை சூழ்ந்த நீர்

இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தற்போது ஒரு லட்சத்து 24 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக அருகே உள்ள இந்த கோவிலில் கொள்ளிடத்தின் ஊற்று நீர் புகுந்தது. இதைத்தொடர்ந்து கோவிலுக்குள் சுவாமி கருவறை வரை நீர் சூழ்ந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் முழங்கால் வரை நீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர்.

மேலும் சிறுவர்கள், முதியவர்கள், வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் உள்ளிட்டோர் தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் வழியில் கோவிலுக்கு இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். ஆனால் கோவிலுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அவர்கள் சிரமத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது.

வெளியேற்ற கோரிக்கை

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் திருமழபாடி பற்றிய தகவல் உள்ளதால், இந்த கோவிலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், தண்ணீர் தேங்கியுள்ளதை பார்த்து அவர்கள் அதிருப்தியுடன் செல்கின்றனர். எனவே கோவில் நிர்வாகம் கோவிலின் உள்ளே தேங்கிய நீரை மோட்டார் மூலம் வெளியேற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story