தேனி பனசலாற்றில் தண்ணீர் திருட்டு:குறைதீர்க்கும் கூட்டத்தில் பா.ம.க.வினர் புகார்


தேனி பனசலாற்றில் தண்ணீர் திருட்டு:குறைதீர்க்கும் கூட்டத்தில் பா.ம.க.வினர் புகார்
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி பனசலாற்றில் தண்ணீர் திருட்டு நடப்பதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் பா.ம.க.வினர் புகார் கொடுத்தனர்.

தேனி

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மொத்தம் 258 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் ஜெய்பீம் புரட்சிப் புலிகள் அமைப்பின் தலைவர் அருந்தமிழரசு தலைமையில், கருவேல்நாயக்கன்பட்டி வாசுகி காலனியை சேர்ந்த மக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், "வாசுகி காலனியில் 63 ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா இல்லை. எனவே, இங்குள்ள 200 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

தண்ணீர் திருட்டு

பா.ம.க. நகர செயலாளர் காஜாமைதீன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "தேனி பனசலாற்றில் தண்ணீர் திருட்டு நடக்கிறது. நகராட்சி பகுதியில் இருந்த 10 கண்மாய்களில், 3 கண்மாய்கள் தான் தற்போது உள்ளன. 7 கண்மாய்களை காணவில்லை. விளை நிலங்கள் மற்றும் ஓடைகள் இருந்த தடம் தெரியாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ஆற்றில் தண்ணீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

உத்தமபாளையம் உ.அம்மாபட்டியை சேர்ந்த அழகர் மனைவி சரண்யா கொடுத்த மனுவில், "எனது கணவர் கடந்த மாதம் 29-ந்தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் அருகில் விபத்தில் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், எனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளது. இவரை கொலை செய்வேன் என்று சிலர் கூறி வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே, இதுகுறித்து விசாரிக்க வேண்டும். எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.


Related Tags :
Next Story