பராமரிப்பில்லாத குடிநீர் குழாய்கள்


பராமரிப்பில்லாத குடிநீர் குழாய்கள்
x
திருப்பூர்


மடத்துக்குளம் பகுதியில் குடிநீர்க் குழாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சேதமடையும் நிலையில் உள்ளது.

திருமூர்த்தி கூட்டுக்குடிநீர்

மடத்துக்குளம் தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களுக்கு திருமூர்த்தி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் திருமூர்த்திமலை பகுதியிலிருந்து குழாய்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு வரப்படுகிறது. பின்னர் கீழ்நிலை மற்றும் மேல்நிலைத் தொட்டிகளில் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குடிநீர்க்குழாய்கள் பராமரிப்பில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் அலட்சியம் காட்டுவதால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு குடிநீர் வீணாகி வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் புதிய குடிநீர்த் திட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் பழைய குடிநீர்த் திட்டத்தில் வினியோகத்தை நிறுத்தியதால் பல கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

குளறுபடி

மடத்துக்குளம்-குமரலிங்கம் சாலையோரத்தில் உள்ள குடிநீர்க் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் வழிந்து வருகிறது.அத்துடன் சர்க்கார் கண்ணாடிபுத்தூர் பிரிவுக்கு அருகில் உள்ள மழை நீர் ஓடையின் குறுக்கே சிறிய அளவிலான பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்மீது குடிநீர்க் குழாய்கள் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த குழாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் குடிநீர் பெருமளவு கசிந்து வெளியேறுகிறது. மேலும் குழாயைச் சுற்றிலும், பாலத்தின் மீதும் அதிக அளவில் புற்கள் மற்றும் மரங்கள் முளைத்துள்ளது.

இந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால் அவற்றின் வேர்கள் குடிநீர்க் குழாயை மட்டுமல்லாமல் பாலத்தையும் சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே புதர்ச் செடிகள் மற்றும் மரங்களை அகற்றி முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிநீர் வடிகால் வாரியத்தின் குளறுபடிகளால் உள்ளாட்சி நிர்வாகங்கள் பொதுமக்கள் மத்தியில் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய நிலையை தவிர்க்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story