பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தண்ணீர் டிராக்டர் டிரைவர் இரும்பு குழாயால் அடித்துக்கொலை - 3 பேர் கைது


பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தண்ணீர் டிராக்டர் டிரைவர் இரும்பு குழாயால் அடித்துக்கொலை - 3 பேர் கைது
x

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தண்ணீர் டிராக்டர் டிரைவர் இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

ஆவடி கவுரிபேட்டை கம்பர் தெருவை சேர்ந்தவர் மோகன்குமார் என்ற மனோஜ் (வயது 26). இவர், ஆவடி புதுநகர் 3-வது தெருவை சேர்ந்த பிரபு (32) என்பவரின் தண்ணீர் லாரியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இருவரும் சேர்ந்து ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்து வந்தனர்.

மோகன்குமார், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரபுவிடம் கடனாக ரூ.10 ஆயிரம் வாங்கியதாக தெரிகிறது. பிரபு பலமுறை கடனை திருப்பி கேட்டும் பணத்தை கொடுக்காமல் மோகன்குமார் காலம்தாழ்த்தி வந்தார். இது தொடர்பாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை மோகன்குமார், டிராக்டரில் தண்ணீர் நிரப்பிகொண்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த பிரபு, அவரது நண்பர்களான ஆவடி காமராஜர் நகர் பாரதி தெருவை சேர்ந்த கார் டிரைவர் சதீஷ் (32), பட்டாபிராம் காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்த தனியார் கேபிள் டி.வி. அலுவலக ஊழியரான பிரான்சிஸ் என்ற கலையரசன் (24) ஆகியோர் மோகன்குமாரை வழிமறித்து பெரிய இரும்பு குழாயால் அவரது தலையில் சரமாரியாக தாக்கினர். இதில் மண்டை உடைந்ததால் படுகாயம் அடைந்த மோகன்குமார், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் பிரபு, சதீஷ், பிரான்சிஸ் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த ஆவடி போலீசார், கொலையான மோகன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, சதீஷ், பிரான்சிஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story