நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்துக்கான தேர்தல்: வருகிற 26-ந் தேதி நடக்கிறது


நீரினைப் பயன்படுத்துவோர்   சங்கத்துக்கான தேர்தல்:  வருகிற 26-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்துக்கான தேர்தல், வருகிற 26-ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கான தேர்தல் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தேர்தல்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், எட்டையபுரம் மற்றும் திருச்செந்தூர் வட்டங்களில் நீர்வளத் துறையினரால் அமைக்கப்பட்ட நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் விடுப்பட்ட தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது. நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சிமண்டலத் தொகுதி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து நேற்று சம்பந்தப்பட் தேர்தல் நடத்தும் அலுவலரால் வேட்புமனுக்கள் பெறப்பட்டு உள்ளன. வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரான தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகங்களில் பெறப்பட்டுள்ளது.

வேட்பு மனு பரிசீலனை

பெறப்பட்ட வேட்புமனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பரிசீலனை செய்யப்பட்டு, ஏற்கத்தக்க வேட்புமனுக்களை சம்பந்தப்பட்டதேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். போட்டியில் இருந்து விலகி கொள்ள விரும்பும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை இன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியலை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று மாலை 5 மணிக்கு மேல் அறிவிக்கிறார்.

நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் விடுப்பட்ட தலைவர் மற்றும் ஆட்சிமண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 26-ந் தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 26-ந் தேதி மாலை 4 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story